Sunday, August 21, 2011

பொம்மை மனிதர்கள்

இந்த கதை அதீதம் இதழின் ஆகஸ்ட்-I இதழில் வெளி வந்துள்ளது. கதையா அதீதத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்.

பொம்மை மனிதர்கள்:

அந்த வீடு சோகமயமாய் தெரிந்தது. ஒரு 50 வயது மதிக்கத்தக்க மனிதர் கண்களில் நீர் கசிய "ஏட்டி ஜென்மம் இதிகா ஓ ராம" (என்ன ஜென்மம் இது ராம?) என்ற தியாகராஜரின் வராளி ராக கீர்த்தனை கேட்டு கொண்டு இருந்தார். இந்த பாடலை கேட்பவர் கண்கள் நீர் சொரிவது சகஜம் தான் என்றாலும், இவர் கண்ணீரில் ஒரு பெரிய சோகம், இழப்பு தெளிவாய் தெரிந்தது.


"நான் ஆத்துக்குள்ள வரலாமா?", வாசலில் ஒரு குரல் சன்னமாய் ஒலித்தது. சத்தம் கேட்டு சுந்தரம் அய்யர் வாசல் பக்கம் திரும்பினார். திரும்பின மாத்திரத்தில் "மரகதம் ஒரு பீடை வந்துருக்கு, வந்து அடிச்சு விரட்டுடி, எனக்கு நெஞ்சு வெடிச்சுரும் போல இருக்குடி. நா யாருக்கு என்ன பாவம்டி பண்ணினேன், என்னை அந்த ராமன் இப்படி பொம்மையா ஆட்டி வெக்கறானேடி", என்று கதறினார்.


மரகதம் அழுது சிவந்த விழிகளுடன் சமையற்கட்டிலிருந்து வெளியே வந்து , "வாடிம்மா ஸ்டெல்லா என் புள்ளைய கொண்டு போனது பத்தாதா இப்போ நாங்க இருக்கோமா இல்ல என் மகராசன் ஸ்ரீராமன் போன எடத்துக்கே போய்ட்டோமானு பாக்க வந்தியாடி", பேசும்போது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவள் விழிகளில்.


சுந்தரம் ஐயர், மரகதத்தின் செல்வ புதல்வன், சீமந்த புத்திரன், கருவேப்பிலை கொத்து போல் இருந்த ஒற்றை மகன் ஸ்ரீராமன். தவமிருந்து கிடைத்த ராமனின் பிரசாதம் இந்த ஸ்ரீராமன் என்றே இருவரும் நினைத்து அவனை வளர்த்தனர். அவன் இறந்த மூன்றாம் நாள் இந்த ஸ்டெல்லா மறுபடி வந்து இருக்கிறாள். ஸ்ரீராமன் இறந்த அன்றுதான் ஸ்டெல்லாவை முதல் முறையாய் சுந்தரமும், மரகதமும் சந்தித்தனர். இது இரண்டாம் சந்திப்பு.


ஸ்டெல்லா பேசலானாள், "அம்மா, உங்க மகனை நான் உங்களை விட அதிகமா நேசித்தேன். அவனுக்காக மாமிசம், முட்டை சாப்பிடுவதை கூட நிறுத்தினேன். அவனுக்காக மெழுகாய் காலம் முழுக்க உருகத் தயாராய் இருந்தேன். எனக்கு பிடித்த ஒருத்தரோட இறப்புக்கு என்னையே காரணம் சொல்லுவது சரி இல்லை. யோசிச்சு பாருங்க என்னாலயா அவருக்கு இப்படி ஆச்சு?"


சுந்தரம் ஐயரின் மனதிற்குள் காலம் மூன்று நாள் பின்னோக்கி ஓடியது. சுந்தரம் ஐயர் காபி குடித்துக்கொண்டு இருந்தார். ஸ்ரீராம், பெயருக்கேற்றார் போல முழு மதி போன்ற முகம், அப்பா முன் வந்து, "அப்பா உங்கள்ட ஒன்னு பேசணும்பா." சுந்தரம் அய்யர், பரவசமிகுந்த புன்முறுவல் பூத்த முகத்துடன், "என்னடாப்பா ஸ்ரீராமா சொல்லு", என்றார் வாஞ்சையுடன்.


"அப்பா நான் ஒரு பெண்ணை விரும்பறேன் பா. அவ பேரு ஸ்டெல்லா. தங்கமான பொண்ணு பா. நான்னா அவளக்கு உயிர். ஒருதரம் ஆத்துக்கு கூட்டிண்டு வர்றேன்பா, நீயும் அம்மாவும் பாத்துட்டு சொல்லுங்கோ", பயத்தில் கைகள் நடுங்க, நாக்கு பிறள ஒருவழியாக சொல்லி முடித்தான் ஸ்ரீராம்.


"ஏண்டா நாங்க பாக்குறதுக்கு என்ன இருக்கு? நீ பேருக்கேத்த மாதிரி ஒரு ஜானகியா கூட்டிண்டு வந்தா நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன், இப்படி ஏதோ கழிசடைய போய் காதலிக்கறதா சொல்றியே. இது நன்னாவாட இருக்கு? நோக்கு ஏண்டா இப்படி புத்தி போறது? ஏண்டி மரகதம் கேட்டியாடி நம்ம புள்ளயாண்டான் சொன்னத?"


"அப்பா பேருல என்னப்பா இருக்கு. பேரு வேணும்னா ஜானகினு மாத்திக்கலாம். பிறப்பால எல்லா மனிதர்களும் ஒன்னுன்னு நீங்கதானேப்பா சொல்லுவேள்?" எதிர் கேள்வி கேட்டான் ஸ்ரீராம்.


பேச எத்தனித்த சுந்தரத்தை, மரகதம், "நீங்க சித்த இருங்கோ. பிறப்பால எல்லாரும் ஒன்னு தான்டா, வித்தியாசம் இல்ல. ஆனா வளர்ப்பு? அவ ஏதோ ஒரு கிரகம் பிடிச்ச இடத்துல வளர்ந்தவ. கண்டதையும் திங்கறவ. எப்படிடா அவள சமயக்கட்டுக்குள்ள விடறது? இதெல்லாம் புத்தகங்கள்லையும், நாடகங்கள்லையும், சினிமாவிலையும் வேணா நன்னா இருக்கும். நம்மாத்துக்கு தோதுபடாது டா. நீ விட்டுரு இதுக்கு மேல இது வேண்டாம்".


சுந்தரம் ஐயர் மிகவும் சாது ஆனவர். அதிர்ந்து பேச தெரியாதவர். மரகதம் அழுத்தம் திருத்தமாய் பேசக்கூடியவள், திறமைசாலி. அந்த வீட்டு பொறுப்புகளை அழகாகவும் பக்குவமாயும் நடத்தி வருபவள். அம்மா என்றால் ஸ்ரீராமுக்கு பயம் அதிகம். அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு வீட்டில் இல்லை என்பது அவனுக்கு நன்றாய் தெரியும். ஸ்ரீராம் கோபத்துடன், "நான் வெளிய போறேன். இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன்", என்று கூறிவிட்டு வேகமாய் வெளியே வந்து தனது அபாசீயை முறுக்கினான். இதுவே சுந்தரத்திடமும், மரகத்திடமும், அவன் பேசிய கடைசி வார்த்தை.


உயிருடன் சென்றவன், உயிரற்ற உடலாய், அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் கிடத்தப்பட்டு இருந்தான். மரணம் எல்லாரையும் உலுக்கிப்போடும் ஒரு விஷயம். சிறு வயது மரணம் என்றால் கேட்கவே வேண்டாம். 25 வயது ஸ்ரீராமின் தேகம் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்கள் மரகதமும், சுந்தரமும். அப்போது ஸ்டெல்லா வந்து அறிமுகப்படுத்திக்கொண்டாள். சுந்தரம் அவளை திட்டி வெளியே அனுப்பி விட்டார்.


சுந்தரம் நிகழ்காலத்துக்கு திரும்பி வந்தார். "என் புள்ளயே போய்ட்டான், இப்போ எதுக்கு வந்தே?" என்று ஸ்டெல்லாவிடம் வினவினார்.


ஸ்டெல்லா பேசத் துவங்கினாள். "நான் நீங்க அன்னிக்கி விரட்டினப்பவே, ஸ்ரீராம் போனா மாதிரி, ஏதானும் ஒரு லாரில அடிப்பட்டு போய்டலாம்னு நெனச்சேன். கண்ணை மூடிண்டு மகாபலிபுரம் ரோட்ல என்னோட வண்டில போனேன். போற வழில மயங்கி விழுந்துட்டேன். அந்த வழியா போன காதலர்கள் ரெண்டு பேரு என்னை ஆஸ்பத்திரில சேத்து விட்டா. டாக்டர் நான் இரண்டு மாசம் கர்பம்னு சொன்னார். அதுக்கு காரணம் நம்ம ஸ்ரீராம் தான். எங்க வீட்டுல கருவை கலைக்க சொன்னா. நான் முடியாதுன்னு சொல்லிட்டு நம்மாத்துக்கு கிளம்பி வந்துட்டேன். நான் உள்ள வரலாமா, நேக்கு ஒரு டம்ளர் தீர்த்தம் தரேளா நாக்கு தவிக்கறது" என்று துக்கம், சந்தோஷம், ஏக்கம் என அனைத்து உணர்ச்சிகளும் கலந்த கலவையாய் பேசி முடித்தாள்.


நாட்கள் உருண்டோடின. இரண்டு வருடங்களுக்கு பிறகு.





ஏட்டி ஜென்மமிதிகா, என்று பாடிக்கொண்டே சமைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி. ஸ்ரீராமுடன் சுந்தரமும், மரகதமும் விளையாடிக்கொண்டு இருந்தனர். "ஜானகி சித்த இங்க வாம்மா, நம்ம ஸ்ரீராம்கு பசிக்கறது, ரசம் சாதம் பிசஞ்சு எடுத்துண்டு வா", என்றாள் தனது அழுத்தமான குரலில்.

குழந்தை ஸ்ரீராம் தனது எலி பொம்மைக்கு சாவி கொடுக்க, எலி பொம்மையுடன், சுந்தரம், மரகதம் மற்றும் ஜானகியும் சேர்ந்து ஆடினர் பொம்மைகளாய். அந்தக் குழந்தை சாவி கொடுத்து இயக்கியது பொம்மையை மட்டுமல்ல அந்த மூன்று மனிதர்களையும் தான்.


1 comment:

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...