Friday, November 11, 2011

மாண்டவி

இந்த கதை அதீதம் இதழின் september-I இதழில் வெளி வந்துள்ளது.

மாண்டவி

விடியற்காலை ஐந்து மணி. ஒரு பெண் தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். உள்ளே குழந்தை அழும் சத்தம்.

"அடியே உன் பொண்ணு ஊரையே எழுப்புவா போல. சேவலுக்கு போட்டியா கத்தறா. வந்து பாத்து தொலை", அதிகாரமாய் கேட்டது ஒரு குரல். விடு விடுவென உள்ளே சென்று குழந்தையை தோளில் போட்டு கொஞ்சி தூங்க வைத்தாள்.


மாண்டவிக்கு இது இரண்டாவது பெண் குழந்தை. முதல் பெண்ணிற்கு வரும் ஐப்பசியில் 4 அகவை ஆகிறது. இரண்டாவது குழந்தைக்கு கடந்த வாரம் தான் காது குத்தி ஒரு வயது முடிந்ததற்கு சடங்கெல்லாம் செய்யப்பட்டது. அவள் இப்படி காலையில் அழுவது கிட்டத்தட்ட வாடிக்கை ஆகிவிட்டது. "ஐந்து வருடம் சாதகம் செய்தால் கூட இவளைப்போல் பைரவி ராகத்தில் அழ முடியாது என்ன சாரீரம் எம் எல் வி அம்மா மாதிரி", சலித்துக்கொண்டே தன் மகளின் அழுகை சங்கீதத்தை ரசித்தால் மாண்டவி.

குழந்தையை பார்த்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் அதிகாரக்குரல். "பைத்தியமே, இன்னிக்கி வெள்ளிகிழமை, காவி போடணும்னு தெரியாது? உன்ன சொல்லக்கூடாது, வளத்தா பாரு என் நாத்தனார்காரி அவளை சொல்லணும் ச.. எல்லாம் நான் சொல்லணும். உதடு தேயரத்துக்கு உள்ளங்கால் தேயலாம் நானே போடறேன்"

மனதிற்குள் கோவம் பொத்துக்கொண்டு வந்தது மாண்டவிக்கு. "குழந்தை அழுதுதுனு தானே பாதில வந்தேன். நா உடனே வரலைன்னா அதுக்கு ஒரு பேச்சு பேசுவா. என் ஒர்படி இன்னமும் தூங்கறா. அவளை ஒன்னும் கேக்கறதில்லை. என் முகத்துல இளிச்ச வாய்னு எழுதி ஒத்திருக்கு போல. இத்தனைக்கும் அவ வேற வீட்லேந்து வந்த பொண்ணு. நான் இவாளோட சொந்த அண்ணா பொண்ணு", மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.


ஆறு மணி ஆயிற்று. "சீக்கரம் காபி கொடுடி மாண்டவி. எனக்கு 6 மணிக்கு காபி வேணும்னு தெரியுமோன்னோ. என்ன பண்ணின்டுருக்க?", மீண்டும் அதிகாரமான குரல்.

"ஏண்டி கோசலே, நீயே போய் போட்டுக்கறது காபி வேணும்னா. எதுக்கு அவளை ஏவரே", என்று மாண்டவியின் மாமனார் தசரதன் பரிந்து பேசினார்.

"இந்தாங்கோ காபி", என்ற இரு வார்த்தையுடன் ஒன்றும் பேசாமல் நகர்ந்து சென்றாள் மாண்டவி. "இந்த மைதிலி என்ன பொடி போட்டு வெச்சுருக்கான்னு தெரில. நன்னா புக்காத்துலாயும் சொகமா இருக்கா. என் அத்தை என்ன மட்டும் தான் வேல வாங்கறா". நாள் முழுவதும் இது போன்ற அதிகார ஏவல்கள், வீட்டு சமையல், குழந்தையை பள்ளிக்கு அனுப்புதல், கைக்குழந்தையை பார்த்துக்கொள்ளுதல் என பம்பாரமாய் இரவு வரை சுழன்றாள் மாண்டவி.


இரவு உணவுக்கு பின்னர், தசரதன் தன் மகன் பரத்திடம், "இதோ பாருடா உன் பொண்டாட்டிய நீதான் ஒழுங்கா பாத்துக்கணும். ராம பாரு, மைதிலிய ஒரு வேலை செய்ய விடுறதில்ல. உன் பொண்டாட்டிய மட்டும் தான் கோசலை வேல வாங்குறா. நீ தனி குடித்தனம் போனா தான் சரிப்படும் ஆமா"

பாத்திரம் தேய்த்தல், சமயற்கட்டு அலம்புதல் என்று அடுத்த சுற்று வேலை முடித்து மாண்டவி படுக்கையறைக்கு செல்லும்போது மணி 11.

"மாண்டு என்னடி தினம் 11 மணிக்கு தூங்கி 5 கு எந்திரிச்சா உடம்புக்கு என்னடி ஆறது, நான் வேணா அம்மாட்ட பேசி தனிக்குடித்தனம் ஏற்பாடு பண்ணட்டுமா?" என்றான் பரத்.

"நீங்க மட்டும் வேணா தனிக்குடித்தனம் போங்க. நான் வரதா இல்ல அத்தைய விட்டுட்டு", பளிச்சென்று சொன்னாள் மாண்டவி.

"லூசாடி நீ, எங்கம்மா இப்படி வேலை வாங்கியும் அவாளோடதான் இருப்பேங்கற?"

"உங்களுக்கு வெளிய இருந்து பாத்தா இப்படி தான் தெரியும். எங்கத்தைக்கு என்ன எவ்வளவு பிடிக்கும்ங்கறது எனக்கு தான் தெரியும். ஒரு நாள் கூட என் காபி குடிக்காம அவங்களால இருக்க முடியாது. ஒரு நாள் மைதிலி காபி கொடுத்தா. அதை இப்போ வேண்டாம்னு நாசுக்கா சொல்லி அனுப்பிட்டு என்கிட்டேந்து காபி வாங்கி குடிச்சா. வரலக்ஷ்மி நோம்புக்கு நா பண்ணின வடை, மோதகம் அருமையா இருக்குன்னு தெரு பூரா தம்பட்டம் அடிச்சா. இத்தனைக்கும் எனக்கு கூடவே இருந்து சொல்லிகுடுத்ததெல்லாம் அத்தை தான். மதியம் என் மடிலதான் படுத்துண்டு தூங்குவா. தினமும் சாயங்காலம் என்ன பாட சொல்லி கேப்பா. இவ்வளவு ஏன், போன வாரம் கீழ விழுந்துட்டேன் சமயகட்டுல. அன்னிக்கி மத்தியானம் பூரா எனக்கு கால் அமுக்கி விட்டா. காலேல போயிட்டு சாயங்காலம் வர உங்களுக்கு எங்க தெரியப்போகுது எங்க உறவோட அருமை".

அறைக்கு வெளியே கோசலை தன் கணவரிடம், "நான் சொன்னேனே கேட்டேளா என் அண்ணா பொண்ணு ராமாயணத்து மாண்டவி மாதிரியேன்னு. கைகேயி சொல்லாமலே குறிப்பறிந்து நடந்து கொண்டவள் அந்த மாண்டவி. என் மாண்டவியும் அப்படித்தான். அவ சொன்னா மாதிரி உங்களுக்கு எங்க தெரியப்போகுது எங்க அருமை", என்றாள் விழியோரம் உணர்ச்சி பெருக்கால் கண்ணீருடன்.

No comments:

Post a Comment

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...