Sunday, July 24, 2011

சாப்ட்வேர் சன்யாசிகள் - 2

ஒவ்வொரு வேலை செய்வோருக்கும் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன. சாப்ட்வேர் மக்களுக்கு செலவினங்கள் இன்னும் அதிகம். சிக்கனமாய் இருந்தால் வேலைக்கு ஆகாது. ஏன் வீடு வாடகைக்கு விடுவோர் கூட சாப்ட்வேர் மக்கள் என்றால் வாடகை பன்மடங்கு உயர்த்தியே கூறுகின்றனர். வாங்கும் சம்பளம் வரிக்கும் வாடகைக்குமே போய் விடும்.
சாப்ட்வேர் மக்களும் கடன் வாங்குகின்றனர், படித்த கடன், படிப்பதற்கு கடன், வீட்டு கடன், வாகனக்கடன் என்று. அந்த கடன்கள் ரத்து செய்யப்படுவதில்லை,  வட்டியுடன் அடைக்கப்படுகிறது. (நாங்கள் ரத்து செய்யுங்கள் என்று கேட்பதும் இல்லை)

அரசாங்கங்கள் விவசாயக்கடனை ரத்து செய்கிறது. அனால் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவரின் விவசாயக்கடனை ரத்து செய்வது முட்டாள் தனமல்லவா? சாப்ட்வேரின் தேக்கநிலையின் (recession) சமயத்தில், பலர் வேலை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். பலர் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அப்போது யார் என்ன செய்தீர்கள்? நீங்கள் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று கேட்கவில்லை. நாங்கள் கட்டும் வருமான வரியால்தான், இதர மறைமுக வரிகளால்தான், அரசியல்வாதிகள் சுரண்டி தின்க முடிகிறது, இலவசங்களை மக்கள் பெற முடிகிறது என்பதை சிறிதாயினும் உணர்ந்தால் அதுவே போதும்.

ஒரு திரைப்படம் ஒன்று பார்க்க நேர்ந்தது. பெரும்பாலான மக்கள் நன்றாக இருக்கிறது, அருமை என்று கூறிய படம். "தமிழ் M.A.". படத்தில் தமிழ் படித்த ஒருவர் வாழ்க்கையில் கஷ்டப்படுவது போலவும், இந்த சாப்ட்வேர், கால் சென்டர்களில் வேலை செய்வோர் எல்லாம் சந்தோஷமாக வாழ்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. சாப்ட்வேர் மக்களாலா தமிழ் படித்தோர் கஷ்டப்படுகின்றனர்? இந்த உலகத்தில் வாழவா வழி இல்லை? அடுத்தவன் வாழ்கையை பார்த்து வயித்தெரிச்சல் படுவதுதான் படித்த தமிழுக்கு அழகா?

சமுதாயத்தில் ஏற்றதாழ்வுகள் இன்று அதிகரித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அனால் அதற்க்கு ஐ.டீ மக்கள் எவ்விதத்திலும் காரணம் இல்லை என்பதும் உண்மை. கொஞ்சம் யோசித்தால் இந்த உண்மை தன்னால் விளங்கும். அடுத்த வீட்டை பார்த்து பொறாமை பட்டது சமுதாயத்தின் தவறல்லவா?

ஒரு பெண்மணி கவர்ச்சியான ஒரு வசனம் எழுதிய டீ-ஷர்டை அணிந்து இருப்பார். படத்தின் கதா நாயகன் (அவனை இவ்வாறு அழைப்பது பொருந்துமா என்று தெரியவில்லை!!!) அந்த வசனத்தை படித்து விட்டு, அந்த பெண்ணின் மார்பகங்களை பிடிப்பார். "ஐ டார்" (எனக்கு தைரியம் உள்ளது) என்றும் கூறுவார். இதுவா தைரியம்? இப்படி செய்ததன் பின்விளைவை அவன் எதிர்கொள்வதை காட்டியிருந்தால் ஒரு வேளை அந்த கதா நாயகனையும், இயக்குனரையும் பாராட்டலாம்.

"அப்போ பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிந்து வெளியே வரலாமா?" என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம், வரலாம், வருவார்கள். நீங்கள் "ஐ டார்" என்று திரைப்படங்களில் வேண்டுமானால் செய்யலாம், நிஜத்தில் செய்தால், மூஞ்சி, மொகரை பெயரும். இன்னொரு சினிமா வசனம், "என்ன பொருத்தவரைக்கும் சப்பையும் ஒரு ஆம்பள தான், எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்". இதை எழுதிய வசனகர்த்தாவிற்கு ஒரு சபாஷ். இதற்கும் சாப்ட்வேருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. சாப்ட்வேர் துறை ஆண்களை சாப்டாகவும் சப்பையாகவும் ஆக்கி விட்டது.

எப்படி? அடுத்த சந்நியாசத்தில் பார்ப்போம்.

(சந்நியாசம் தொடரும்..) 

Tuesday, July 12, 2011

சங்கீதச் சாரல் - 1

ராகம்: தோடி
தாளம்: ரூபகம்

பல்லவி:

ஆடும் சிதம்பரேசா ஆலவாயுறை சோமேசா
தஞ்சை வளர் ப்ருஹதீசா தயைகூர்ந்து அருள்புரிவாய்

அனுபல்லவி:

அருவமாய் அருமருந்தாய் ஆருயிராய் அகிலமுமாய் 
அம்பலத்திலும் ஏழை வேங்கடேசன் உள்ளத்திலும் (ஆடும்)

சரணம்:

அன்புடன் உனை நினைந்து அத்வைத இன்பம் கொண்டு
ஆதாரம் நீயென்று அடிமலரை நிதம் பணியும்
அடியாரவர் மனமதனில் அதியத்புத நடனமிட்டு
அல்லல்களை தீர்த்தோம் தீர்த்தோம் தீர்த்தோம் ஆனந்தம் தந்தோம் தந்தோம் என்று (ஆடும்)

Sunday, July 3, 2011

கூகிள் பிளஸ் - 3

ஏரிக்கரையில் சொரிமுத்து வருவதற்கு முன்னரே, குப்புசாமியும் மாயாண்டியும் வந்திருந்தனர். சொரிமுத்து கையில் ஒரு லேப்டாப் டேட்டா கார்ட் சகிதமாய் வந்தார். "என்னய்யா டெமோ காட்ட போறியா, லேப்டாப் சகிதமா வந்துருக்கடே" என்று வினவினார் மாயாண்டி.

சொறி: இல்லையா விவசாயம் பத்தி இன்னிக்கி ஒரு லைவ் கான்பரன்ஸ் இருக்கு. அத ரெகார்ட் பண்ணிகிட்டே உங்கள்ட பேசலாம்னு தான் லாப்டாப்போட வந்தேன்.

மாயா: அப்டியே எங்களுக்கு அந்த கூகிள் பிளஸ் எப்படி இருக்கும்னு காட்டுய்யா..

சொரிமுத்து கூகிள் பிளஸ் டெமோ வீடியோ ஓட்டினார். நாமளும் பாப்போமா?


சொறி: இதுல நிறைய நல்ல விஷயம் இருக்கு. தேவை இல்லாத குப்பை அப்ஸ் கிடையாது. அதுனால ஸ்பாம் ரொம்ப கம்மியா இருக்கும். நண்பர்களை சரியா அந்தந்த வட்டத்துல வெச்சிகிட்டோம்னா அந்த நண்பர் வட்டத்தோட மட்டும் விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.கூகிள் பஸ்னு ஒன்னு இருக்கு. அத இதுகூட லிங்க் பண்ணிக்கலாம். இன்னும் ட்விட்டர் ஏன் பேஸ்புக்கோட கூட லிங்க் பண்ணிக்கலாம்.

ஹாங் அவுட்னு ஒரு வசதி இருக்கு. நிறைய பேரு கூட ஒன்னா வீடியோ சாட் பண்ணலாம். நண்பர்கள் பகிர்ந்துகொள்ற விஷயம் பிடிச்சு இருந்தா +1 போடலாம். இது கிட்ட தட்ட பேச்புக்கோட லைக் மாதிரிதான். -1 கொடுத்துருந்தா நல்ல இருந்துருக்கும்.

நம்மளோட நண்பர்கள் பகிர்ந்துகொள்ற போடோக்கள பாக்கலாம். நம்ம பிக்காசோல போட்டு இருக்கற போடோக்கள பகிர்ந்துக்கலாம். சோசியல் நெட்வொர்க்ல இருக்கற எல்லா வசதிகளுமே கொஞ்சம் அழகா மாற்றம் செய்யப்பட்டு இதுல இருக்கு. ஆனா ஒரு விஷயம் நிறைய பேரு பக் இருக்குன்னு சொல்றாங்க. இன்விடேசன் அனுப்ப முடிலன்னு சொல்றாங்க. நண்பர்கள் வரலன்ன, கூட்டம் இருக்காது, மக்களும் உபயோகிக்க மாட்டாங்க. அதுனால கூகிள் சீக்கிரமா இதோட ஹைப் குறையறத்துக்கு முன்னாடி எல்லா விஷயங்களையும் சரி பண்ணனும்.

குப்புசாமி: சரிடே. எனக்கு ஒரு இன்விடேசன் அனுப்புடே. நானும் கூகிள் பிளஸ் உபயோகிக்கறேன்.

சொறி: அடப்போடே. நானே யாருக்கும் இன்விடேசன் அனுப்ப முடிலன்னு கடுப்புல இருக்கேன். கூகிள்கு ரிப்போர்ட் பண்ணி இருக்கேன். சரி ஆனா அனுப்பறேன். அவங்க சரி பண்ணலைனா கூகிள் வேவ் மாதிரி எபிக் சொதப்பல் ஆகிடும். பொறுத்து இருந்து பாப்போம்டே. சரி இருட்டிடுட்டு வருது. வூட்டுக்கு போவோம். ராத்திரி ஸ்கைப்ல வாடே அரட்ட அடிக்கலாம் மக்கா..

குப்பு, மாயா: சரிடே, நைட் ஸ்கைப்ல பிங் பண்றோம் கான்பரன்ஸ்ல அரட்டை அடிக்கலாம். என்னதான் சோசியல் நெட்வொர்க் வந்தாலும் இந்த ஸ்கைப்போட கால் க்வாலிட்டி அடிச்சுக்க முடியாதுடே.. 

சொரிமுத்து: ஸ்கைப் கால் நம்மள மாதிரி தண்டப்பயலுவலுக்கு ஒசில பேசிக்க கிடைச்ச வரப்ப்ரசாதம்டே.

நண்பர்கள் விடை பெற்றனர். நம்மளும் கூகிள் பிளஸ் பதிவு முடிச்சுக்குவோமா? பதிவை படிச்ச, கமெண்ட் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

Saturday, July 2, 2011

கதம்ப மாலை - 1

கதம்பம்:

கதம்பம்னா இன்னதுன்னு இல்லாம நெறைய விஷயங்கள் கலந்து இருக்குறது. தஞ்சாவூர் கதம்பம் ரொம்ப பேமஸ். அரளி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, சம்பங்கி, மல்லி, முல்லைனு இன்னும் நிறைய விதமான மலர்கள் சேர்த்து தொடுக்கப்பட்ட மலர் சரம், மலர் மாலை தஞ்சையில் மிகவும் புகழ் பெற்றது. 

இப்போ நம்ம ஒரு இடத்துக்கு சாப்பிட போறோம், வெறும் இட்லி மட்டும்தான்னு இருக்கறது எப்படி, இட்லி, தோசை, ரவா இட்லி, குஷ்பு இட்லி (அது என்னங்க குஷ்பு இட்லி யாரானும் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்களேன்), மசால் தோசை, நெய் தோசை, பொடி தோசைனு வகை வகையா இருந்தா எப்படி? ரெண்டாவது சுப்பரா இருக்கும்ல, அது மாதிரிதான் கதம்பமும். வகை வகையா இருந்தா அருமையா இருக்கும்ல அருண் கசாட்டா ஐஸ் கிரீம் மாதிரி.

பஜ்ஜில கூட கதம்ப பஜ்ஜினு ஒன்னு கேள்வி பட்டுருக்கேன், சாப்பிட்டதில்ல. அதுனால அதுக்கும் கதம்பம்கும் என்ன சம்பந்தம்னு தெரில.

மதுரை:

என்னடா கதம்பம்னான் இப்போ மதுரைக்கு வந்துட்டான்னு திட்டாதீங்க. மதுரைக்கும் கதம்பத்துக்கும் சம்பந்தம் இருக்கு. "கதம்ப வனம்" தெரியுமா? கேள்வி பட்டு இருக்கீங்களா? ஒரு காலத்துல மதுரை கதம்ப வனத்தால சூழப்பட்டு இருந்துச்சாம். எல்லா விதமான பறவைகள், விலங்குகள் ஒன்னுக்கொன்னு ஒத்தாசையா, தொந்தரவு பண்ணிக்காம வாழ்ந்துச்சாம் (இன்னிக்கி மனுஷங்க கூட இப்படி இருக்கறதில்ல). அந்த கதம்ப வனத்துலதான், மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் அருளாட்சி செய்ததா திருவிளையாடல் புராணம் சொல்லுது. கதம்ப வனத்துல எப்போதும் சந்தோசம் நீடிச்சு இருக்குமாம், பாம்பும் மயிலும் சேர்ந்து ஆட, குயில்கள் பாட, யானைகள் மத்தளம் வாசிக்கன்னு ஒரு பெரிய வர்ணனையே இந்த கதம்ப வனம் பத்தி இருக்கு. ஒரு வேளை மனிதன் வந்ததுக்கு அப்புறம் தான் எல்லா விலங்குகளும், பகை, த்வேஷம்லாம் கத்துக்கிச்சோ :( :(

சங்கீத மும்மூர்த்திகள்ள ஒருத்தரான முத்துசாமி தீட்சிதர் தன்னோட மீனாக்ஷி மீது அமைந்த பல பாடல்கள்ள "கதம்ப வன வாசினி"னு அம்மனை வர்ணிக்கிறார். "வாசினி" என்றால் வசிப்பவள் என்று பொருள்.

இட்லி - சட்னி:

மதுரை பத்தி பேசினா இட்லி சட்னி பத்தி பேசாம இருக்க முடியுமாங்க. எல்லா ஊருலயும்தான் இட்லி இருக்கு, சட்னி இருக்கு, ஆனா இந்த மதுரை இட்லி யப்பப்பா என்ன ருசி என்ன ருசி. சாப்பாட்டோட ருசி சாப்பாட்டுல இல்ல, சமைக்கிறவங்க, பரிமாறுறவங்க நம்ம மேல வெச்சுருக்குற பாசத்துல இருக்குன்னு நிறைய பேரு சொல்லுவாங்க. மதுரகாரவங்க பாசக்காரவனுக, ஒரு வேளை அதுனால இம்புட்டு ருசியா இருக்கோ?

சாப்பாட்டுல தமிழன அடிச்சுக்க ஆளே இல்லங்க. நீங்க தமிழ் நாடு விட்டு வெளிய வாங்க சப்பாடோட அருமை தெரியும். இட்லிக்கு தர சாம்பார் பாயசத்த விட இனிப்பா இருந்த எப்படி சாப்பிடுறதாம்? மதுரை மல்லி சட்னி, சாம்பார் இருந்தா போதும் லபக்கு லபக்குனு இட்லி உள்ள போய்க்கிட்டே இருக்கும்.  எங்கூருலேந்து மதுரை மூன்றரை மணி நேர தூரம் தான். ஊருபக்கம் வரப்போ மதுரை போய் ஒரு எட்டு சொக்கனை பாத்துட்டு இட்லி சாபிட்டுட்டு வரணும்.

பாசம்:

இனம் புரியாத ஒரு உணர்வு இது
பிரிக்க முடியாத பந்தம் இது
வெல்ல முடியா வேந்தன் இது
உயிரை வாழவைக்கும் அமுதம் இது.

இந்த பாசம்னு ஒரு விஷயம் இருக்குறதால தான் மனித வாழ்க்கையே ஓடிட்டு இருக்குன்னு சொல்லலாம். தெயவத்த துதிச்சு பாடி பூஜ பண்றவங்கலேந்து, அரசியல்ல ஊழல் பண்றவங்க வரைக்கும் எல்லாரும் ஒரு பாசத்துனால தான் பண்றாங்க. கடவுள் மேல பாசம் (பக்தி?? எனக்கு பக்தியைவிட பாசம் ஜாஸ்தி. கடவுளும் பாசத்ததான் எதிர்பார்க்குறார்னு எல்லா மதங்களும் சொல்லுது) இருக்கறதால பாட்டு பாடி பூஜை பண்றாங்க. பணத்துமேல பாசம் இருக்கறதால ஊழல் பண்ணி கொள்ளை அடிக்கறாங்க. பாசம் என்னவோ ஒன்னுதாங்க. இல்லைம்பீங்களா?

பாட்டு:

என்னதான் சொல்லுங்க பாட்டுன்னா கர்நாடக சங்கீதம் தான். எத்தனை ராகம், எத்தனை பாடல், எவ்வளவு சுகம். மனுஷங்க மட்டும் இல்லாம, மிருகங்கள், மரம், செடி, கொடினு எல்லா ஜீவ ராசியையும் வசப்படுத்துற சக்தி நம்ம சங்கீதத்துக்கு உண்டுங்க. நம்ம கர்நாடக சங்கீதம் ஆள அப்புடியே உருக்கி சொக்க வெச்சுடும்.

கர்நாடகம்னு பேருல இருக்கறதால தமிழ்லேந்து அதை தூரமா நினைக்காதீங்க. கர்நாடகம்னு பேரு வந்ததுக்கு காரணம் பழமை என்ற பொருள்ளதான். கர்நாடக சங்கீதத்துக்கும் தமிழுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் தேவார காலத்துக்கும் முன்னாடிலேந்தே இருக்கு. ஒரு பாட்டு கேப்போமா?


தண்டப்பயல் மொழி:

ஜாதி, இனம், மொழி, நாடு இப்படி மனிதருக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த ஒரு விஷயமும் தவறானதே!!!

யோசிச்சு பாருங்க, இஸ்லாம், ஹிந்துனு ஒரு பிரிவினை இல்லாம இருந்தா நாமளும் பாகிஸ்தானும் இன்னிக்கி ஒண்ணா இருந்துட்டு இருப்போம். நாடுனு ஒரு பிரிவினை இல்லன்னா உலகத்துல எந்த போரும் நடக்காது ரத்த ஆறும் ஓடாது.

மொழிய ஒரு பொருட்டா கருதாம, மனிதனுக்கு தரவேண்டிய ஒரு உரிமைய கொடுத்துருந்தா இன்னிக்கி இலங்கை எப்படி இருந்துருக்கும்? மொழி, நாடுன்னு வெச்சு எதுக்கு மனுஷங்கள பிரிச்சு பாக்கணும்? முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் நேசிச்சு அரவணைச்சு போவோமே?

கூகிள் பிளஸ் - 2

சோடா குடிக்கப்போன சொறிமுத்து உடன், மாயாண்டியும், குப்புசாமியும் கூடவே சென்றனர். பொட்டிக்கடை பெஞ்சில் அமர்ந்து சோடா பருகிக்கொண்டே, தங்களது உரையாடலை தொடர்ந்தனர்.

குப்புசாமி தனது கேள்வியை திருப்பியும் கேட்டார். "சொரிமுத்து, பேஸ்புக் எதுக்கு வந்துச்சுன்னு சொல்லுயா"

சொரிமுத்து ஏதோ பெரிய வரலாற்று சிறப்புரை நடத்துபவர் போல் பாவனை செய்துகொண்டு கதையை தொடர்ந்தார்.

"நம்ம ஊரு பசங்கலாம் அமெரிக்கா போய் படிக்குறானுவல. அது ஏன் அங்க போய் படிக்குறாங்கனு தெரிமா? அப்புடி நம்ம ஊருல இல்லாதது அங்கன என்ன இருக்குது?" சொரிமுத்து தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லும் பழக்கம் உடையவர் (ஹி ஹீ என்னைபோல). அதற்குள் அவசரக்குடுக்கை குப்புசாமி, "என்ன பெருசா, இங்குட்டு ஒரு கறுப்பி, அங்குட்டு ஒரு வெள்ளக்காரின்னு ரெண்டு பக்கமும் பிகரோட சுத்தலாம். என்னதான் சொல்லு பாரீன் பிகர் பாரீன் பிகர் தான்யா, என்ன இடுப்பு என்ன ஓடிப்பு".

"உன்ன மாதிரி கொஞ்சம் பொம்பள பொறுக்கி பசங்கலாளையும் ஆம்பள பொறுக்கி பொண்ணுகளாலையும் தான்யா இன்னிக்கி சோசியல் நெட்வொர்க்னாலே ஒரு கெட்ட பேரு" என்று சொரிமுத்துவிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.

மாயா: அவன் கடக்குறான்யா நீ மேல சொல்லு.

சொறி: ஆனா அவன் சொன்னதுல பெருசா தப்பு ஒன்னும் இல்லன்னு வெயி. நம்மூரு முனியம்மாவே எம்புட்டு நாள் பாக்குறதுன்னு தான் பாதி பயலுவ அமெரிக்கா படிக்க போறானுவ. அமெரிக்கால இருக்குற பெரிய யுனிவெர்சிட்டில ஹார்வர்டும் ஒன்னு. அதுல மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg)  ஒரு பயல் படிச்சுட்டு இருந்தான். கூட படிக்குற பிகர் ஒருத்திய கலாய்க்கவும், பொண்ணுங்க போட்டோ ஷேர் பண்ணவும் தான் இத ஆரம்பிச்சான். இன்டர்நெட் உலகத்துல இருக்குற பல விஷயங்கள் இந்த ஹார்வர்ட் பசங்க பண்ணினது தான். இது தவிர ஹார்வர்ட் பசங்க தான் நெறைய டெக்னாலஜில கொடி கட்டி பறக்குறாங்க. இப்புடி பட்ட ஹார்வர்ட் யுனிவெர்சிட்டி இவன் தொல்ல தாங்காம இவன விரட்டிடுச்சி. பையன் பேஸ்புக்னு ஒன்னு ஆரம்பிச்சு இன்னிக்கி பெரியாளு ஆய்ட்டான். இது பத்தி இன்னும் தகவல் வேணும்னா "Social Network" னு ஒரு படம் வந்துருக்கு, அத பாருடே.

குப்பு: எல்லாம் சரிடே. ஆர்குட்டுலேந்து எல்லாரும் பேஸ்புக் ஏன் வந்தாங்க?

சொறி: அப்புடி கேளு மக்கா.. அரிதாரம் பூசினா அசிங்கத்த கூட கால் பணத்துக்கு விக்கலாம். ஆர்குட் அசிங்கம், பேஸ்புக் அரிதாரம் பூசின அசிங்கம், அம்புடுதேன் வித்தியாசம். பொழுது போவாட்டி போய் ஜாலியா சாட் பண்ணிட்டு வரலாம். அந்த காலத்துல ஆத்தங்கரை, வூட்டு திண்ணைனு பசங்களும், சமயக்கட்டு, கூடம்னு பொண்ணுங்களும் பேசி பொழுது கழிச்சாங்க. இன்னிக்கி கம்ப்யூட்டர்ல பேசி பொழுத கொல்றாங்க. வேற ஒன்னும் பெருசா காலம் மாறல மக்கா.

குப்பு: சரிடே.. இப்போ கூகிள் பிளஸ் பத்தி சொல்லுடே.

சொறி: பேஸ்புக்குக்கு லாபமோ லாபம். ஆர்குட்ட கூகிள் வாங்கினுச்சி கொஞ்ச நாள் முன்னாடி. இன்னி தேதில ஆர்குட் மொத்தமா படுத்துடிச்சி. என்னடா ஆர்குட் படுத்துடுச்சே, மக்கள் சோசியல் நெட்வொர்க் வுட்டுபுட்டு உருப்படியா எதுனா பண்ண போய்டாங்களானு கூகிள் யோசிச்சுருக்கும் போல. இல்ல மக்கள் திருந்தலங்கறது பேஸ்புக் லாபம் பாத்து தெரிஞ்சுருக்கும். சரி நம்ம திருப்பி இழந்த லாபத்த அடையணும்னு இன்னிக்கி கூகிள் பிளஸ் ஆரம்பிச்சுருக்காங்கனு தோணுது.

மாயா: யோவ் ஆனா இந்த சோசியல் நெட்வொர்க்ல நல்ல விஷயமும் இருக்குடே. பேஸ்புக்ல நிறைய நல்ல குரூப்லாம் இருக்கு. அதுல ஈ-புக்லாம் ஷார் பண்ணிட்டு படிக்கறாங்கடே. நல்ல நல்ல விஷயம் பத்திலாம் பேசுறாங்கடே. சும்மா குறை சொல்லாதே ஹான்..

சொறி: ஆமாயா எல்லாம் இருக்கு. எவ்ளோ பேரு பண்றாங்ககறதுதான் பேச்சு.

மாயா: அது சரிதான். கூகிள் பத்தி குறை சொல்லாதடே. அது இல்லனா இன்னிக்கி உலகமே இல்ல.

சொறி: அது என்னவோ சரிதான். கூகிள் சர்ச் இல்லன்னா இன்னிக்கி எந்த பயலும் சாப்ட்வேர் எஞ்சினியர்னு சொல்லிட்டு சுத்த முடியாது.

ஆனா கூகிள்ல தமிழ் மொழில பக்கங்களை பாக்குறதுக்கு ஒரு வழி இருக்கு. அதுல நீ என்ன எழுத்து வேணாலும் அடி, உனக்கு வர்ற தேடல் உதவி வார்த்தைகள் பாலுணர்வு சம்பந்த பட்டதாதான் இருக்கும் பெரும்பாலும். இது தமிழுக்குனு இல்ல எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் தான். மூணு பெரிய ஆசை, மண், பொன், பெண். இதுல மண், பொன் வேணும்னா உழைச்சு சம்பாதிக்கணும். பெண்ணாசை கொஞ்சம் வித்தியாசமானது. உழைச்சா மட்டும் பத்தாது இன்னும் நிறைய வித்தை தெரியனும்னு சொல்லிக்கறாங்க. அதுக்குதான் இந்த சோசியல் நெட்வொர்க்கோனு கூட தோணுது. 

ஆனா நெறைய பேரு இதை உபயோகமான முறைல பயன் படுத்துறாங்க. பாடல்கள், புத்தகங்கள் ஷார் பண்ணிக்கறாங்க. அதை பாக்குறப்போ சந்தோசமா இருக்கு. உண்மையான நண்பர்கள் நிறைய பேரு எனக்குமே கடச்சு இருக்காங்க.

குப்பு: அது என்னய்யா பெண்ணாசை பத்தி சொல்ல வந்துட்டு பாதிலயே நிறுத்திப்புட்ட. மேல சொல்லுய்யா..

சொறிமுத்து மீண்டும் கோபமாகி, "யோவ் உருப்படியா எதுனா பத்தி பேசுய்யா. எனக்கு அத பத்தி இதுக்கு மேல எதுவும் தெரியாது" (எனக்கும்தான் :( )

"சரிடே எனக்கு கொஞ்சம் ஜோலி இருக்குது இப்போ, சாயங்காலமா நம்ம ஏரிக்கரைல உக்காந்து 5 மணி போல கூகிள் பிளசோட நல்ல விஷயங்கள், வசதிகள் பத்தி பேசுவோம். வரேண்டே." என்று கூறிவிட்டு கிளம்பினார்.

நாமளும் ஏரிக்கரைக்கு போவோம்.

(அடுத்த பாகத்தில் முடியும்)

Friday, July 1, 2011

அர்த்தமற்ற வார்த்தை - 1

பில்ட் அப் எல்லாம் கொடுக்காமல் நேராய் விஷயத்திற்கு வருகிறேன். இல்லை வேண்டாம்னு தோணுது.. அட பில்ட் அப் கொடுக்கிற அளவிற்கு இது பெரிய விஷயம் இல்லீங்க. ஊருள்ள எல்லாரும் ரொம்ப சகஜமா எல்லாத்துக்கும் உபயோகப்படுத்தும் வார்த்தை தான்.

காதல்..

என்னடா அர்த்தம் இல்லனு சொல்றே. இது எவ்ளோ பெரிய சமாசாரம் தெரிமா என்று சண்டைக்கு வரலாம் நிறைய பேர். எவ்வளவு யோசித்தாலும், பட்டி மன்றம் வைத்தாலும் இந்த வார்த்தைக்கு தெளிவான ஒரு விளக்கம் வருமா என்பது சந்தேகமே.

சரி இப்படி வைத்துக்கொள்வோம். இன்றைய சூழ்நிலையில் இந்த வார்த்தை அர்த்தமற்றதாக மாறிக்கொண்டு வருகிறது. காதலில் எவ்வளவு சதவிகிதம் காமம் கலந்து இருக்கலாம் என்பது எனக்கு தெரியாது. (யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்) இன்றைய சூழலில் காமத்தில் சிறிது காதல் கலந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. (உண்மை காதல் ஜோடிகள் மன்னிக்கவும். ஊருக்கே தெரியும் சார்/மேடம் நீங்க மைனாரிட்டினு)

என்னடா நீ என்னவோ யோக்கியன் மாதிரி பேசுறே. நீ எந்த பொண்ணையும் பாத்ததில்லையா, காதலிச்சதில்லையானு கேக்கலாம். இதுக்குலாம் பதில் இல்லாமலா எழுத ஆரம்பிப்பேன்? வெயிட் பண்ணுங்க போக போக சொல்றேன்.

காதலர்கள் வேண்டுமானால் பொய்யாய் இருக்கலாம், காதல் பொய்யாவதில்லை. (எங்கயோ படிச்சதா இல்ல எனக்க தோணினதானு தெரில) காதலும் பொய்யும் ரெட்ட மாட்டு வண்டி மாதிரி. சேந்தே தான் போகும். காதலர்கள் அவர்களுக்குள்ளும் பொய் சொல்லிக்குவாங்க, அடுத்தவங்க கிட்டயும் பொய் சொல்லுவாங்க. உதாரணம்: "நாங்க ரெண்டு பெரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் அவளோதான் வேற ஒன்னும் இல்லை"

"பொய்ம்மையும் வாய்மை யுடைத்து புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்" இது திருக்குறள். "பொய்ம்மையும் வாய்ம்மை யுடைத்து உலகினில் காதல் வேண்டும் எனின்" இது நம்ம திருஜொள்ளுவன் சொல்றதுங்க. (திருவள்ளுவர் என்ன அடிக்காம இருந்தா சரி :( :( )

ஒவ்வொரு காதலிலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. ஒரு சில காதல் அபூர்வமாய் அர்த்தமற்று இருக்கும் (கதை இல்லாத தற்கால தமிழ் திரைப்படம் மாதிரி). அந்த அர்த்தமற்ற காதல் கூட அழகாகத்தான் இருக்கும் (விஜய் ரசிகர்களுக்கு விஜய் படம் மாதிரி).

இரு இரு, நீ காதல் நல்லதுன்னு சொல்றியா, இல்ல கெட்டதுன்னு சொல்றயானு கேக்குறது தெரியுது. ஆனால், அந்த பாழாய் போன காதல் நல்லது கெட்டது பாத்துட்டு வராது. தான் பாட்டுக்கு வந்து ஆப்பு வெச்சிட்டு போயிட்டே இருக்கும்.

காதல் டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் மாதிரி. ஒன்னு ௦0 இல்லையா 1. ஒன்னு உங்கள உச்சத்துல கொண்டு போய் உக்கார வைக்கும் இல்லையா அதல பாதாளத்துல தள்ளி உட்டுறும்.

குழப்பறேன்ல? எல்லாருமே குழம்பிதாங்க இருக்கோம் இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம. உங்களுக்கு அர்த்தம் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க. அர்த்தம் தெரிலையா, வாங்க சேர்ந்தே அர்த்தம் தேடுவோம்.

(அர்த்தத்தின் தேடல் தொடரும்)

சாப்ட்வேர் சன்யாசிகள் - 1

இன்று மக்கள் அனைவரிடமும் ஒரு கருத்து பரவி இருக்கிறது. "அது என்னவோ சாப்ட்வேர் என்ஜினியராம். கம்ப்யூட்டர் படிப்பாம், கை நிறைய சம்பளமாம். பொழுதுக்கும் கூத்து தான் கும்மாளம் தான். சனிக்கிழமை ஆனா சரக்கு என்ன குட்டி என்ன குஜால்டியா இருக்காங்கப்பா."

இந்த கருத்து முழுக்க பொய் இல்லை என்றாலும் முக்கால் வாசி பொய் தான். என்னடா இவன் நேர் மாறாக பேசுறானேனு நினைக்க வேண்டாம். வாங்க நாம உண்மையான சாப்ட்வேர் எஞ்சினியரின் நிலையை பார்ப்போம்.

முக்காலே மூணு வீசம் சாப்ட்வேர் மக்கள் ஒரு சந்நியாச வாழ்க்கையே வாழ்கின்றனர். நித்யானந்த மாதிரி இல்லீங்க, நிஜமான சந்நியாசம். சந்நியாசம் என்பது என்ன? சுய விருப்பு வெறுப்பு ஆசா பாசங்களை துறப்பது. சாப்ட்வேர் மக்களுக்கு அது மிகவும் பழகிப்போன ஒரு விஷயம்.

இது ஏதுடா வம்பா போச்சு. ஏர் இழுத்து விவசாயம் பண்ணுறது எவ்ளோ கஷ்டம் தெரிமா, நெசவுத்தொழில் எவ்ளோ கஷ்டம் தெரிமானு சண்டைக்கு வரவேண்டாம். ஒரு கௌண்டமணி காமெடி நினைவுக்கு வருகிறது.

கௌண்டமணி ஒரு சலூன் கடை வைத்து இருப்பார். முடி வெட்டி கொள்ள வரும் கஸ்டமர் ஒருவர், "இந்த மில்லுல வேல பாக்குறதுக்கு சரைக்கலாம்" என்பார். அவரிடம் கவுண்டமணி "சரைக்கரதுன்னா அவ்ளோ கேவலமா போச்சா" என்று சண்டை இடுவார். அதுபோல சும்மா உட்கார்ந்து இருப்பது முதல் அனைத்து வேலையுமே கடினமானது தான் ஏதானும் ஒரு விதத்தில்.

இந்த சாப்ட்வேர் வேலையில் உடலைத் தவிர மீதி அனைத்திற்கும் பாரம், கவலை என அனைத்து கஷ்டங்களும் உண்டு. உடலால் காயப்படுவதை விட, கஷ்டப்படுவதை விட, மனதாலும், எண்ணத்தாலும் கஷ்டப்படுவது கொடுமையானது இல்லையா.

டெலிவரி நேரம் என்றால் ராப்பகலாய் ஊண் உறக்கம் விட்டு வேலை, மனஜெரிடமிருந்து சுடுசொல் என பல தொல்லைகள். ஊரில் ஒரு வசனம் சொல்வார்கள் "பாம்பிற்கு முகம் காட்டும், மீனிற்கு வால் காட்டும்" என்று. மீனொன்று உண்டாம், அதன் முகம் பாம்பு போல் இருக்குமாம், வால் மீன் போல் இருக்குமாம். பாம்பு வந்தால் முகத்தை காட்டுமாம், பாம்பு தன் இனமென்று ஒன்றும் செய்யாமல் செல்லுமாம். அதேபோல மீனிற்கு வாலை காட்டுமாம். இப்படி இருந்துகொண்டு ஆப்பு வைக்கும் டீம் லீடர்கள், உடன் வேலை பார்ப்பவர்களுக்கு பஞ்சமில்லை இந்த துறையில்.

உண்மையை கூற வேண்டுமானால் சுய விருப்பு வெறுப்புகளை தூர போட்டு விட்டுதான் வேலை பார்க்கின்றனர் பெரும்பாலானோர். நம் தமிழ் நாட்டை சேர்ந்த சாப்ட்வேர் இளைஞர்களோ இளைஞிகளோ தாங்கள் விரும்பிய ஒரு வாழ்க்கையை வாழ்வதாய் தெரியவில்லை. குறைந்த பக்ஷம் ஆண்கள் தாங்கள் விரும்பிய ஒரு வாழ்வை வாழவில்லை. இந்தத் துறையில் ஆண்கள் பாவம் செய்தவர்கள். விழி ஓரம் ஒரு துளி நீர் கசியவைக்கத் தெரியாததால் அவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

அதனால் பெண்களுக்கு தொல்லைகள் இல்லை என்று கூறவில்லை. பெண்களுக்கு இத்துறையில் இருக்கும் பாலிடிக்ஸால் பாதிப்புகள் கம்மி என்றே கூற வருகிறேன்.

(சந்நியாசம் தொடரும்..)
நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...