Friday, August 12, 2011

சுதந்திரம் - குடும்பத்தலைவியின் பார்வையில்

"அம்மா ஸ்கூல்க்கு லேட் ஆய்டுச்சி. என்ன பண்ணிட்டுருக்க? எனக்கு பெல்ட் தேடி எடுத்துக்கொடு", நான்காவது படிக்கும் வருண்.

"அம்மா என் ரிப்பன் பாத்தியாம்மா.. இன்னிக்கி வைட் ரிப்பன் கட்டிட்டு போனும். தேடி கொடேன்" இது ஆறாவது படிக்கும் வனிதா.

வருண், வனிதா இருவரும் லாவண்யாவின் குழந்தைகள். லாவண்யாவும், விமலும் திருமணம் செய்து கொண்டு 13 வருடங்கள் ஆகி விட்டன. லாவண்யா தமிழ் பெண். விமல் ஆந்திராவை சேர்ந்தவன். லாவண்யா குடும்ப பொறுப்பு காரணமாக வேலையை ராஜினாமா செய்து 11 வருடங்கள் ஆகி விட்டது.

வருண் "அம்மா இன்னிக்கி ஸ்கூல்ல இண்டீபென்டென்ஸ் டே மா.. எனக்கும் அக்காக்கும் வந்தே மாதரம் பாரதியார் பாட்டு சொல்லி கொடுத்தல மா அது mp3 பிளேயர்ல ரெகார்ட் பண்ணி கொடும்மா. ஸ்கூல் போறப்போ கேட்டுட்டே போன பாட ஈஸியா இருக்கும்."

"ஆமாம்மா ரெகார்ட் பண்ணி கொடும்மா" ஒத்து ஊதினால் வனிதா.

"அட போங்கடா அவ்ளோ வேலை இருக்கு வீட்டுல, ஞாபகம் இருக்கற வரைக்கும் பாடு எல்லாம் போதும்" சலித்து கொண்டே ரிப்பனை வனிதா கையில் திணித்து, "நீயே கட்டிக்கோ, நான் பெல்ட் தேடனும்" என்று போய்விட்டாள். ஒரு வழியாக பசங்களை ஸ்கூல்க்கு அனுப்பி விட்டு, டிவி ஆன் செய்தாள். மனம் தொலைகாட்சி பெட்டியில் லயிக்காது போகவே, ஓய்வெடுக்க சோபாவில் படுத்துகொண்டாள்.

"ச இப்போன்னு பாத்து விமல் வேற இல்லை. ரொம்ப முக்கியமா இந்த ஆன்-சைட் இப்போ. ஏன்தான் இப்படி இருக்கானோ, கொஞ்சம் கூட குடும்ப பொறுப்பே இல்லாம" என்று நினைத்த லாவண்யாவின் மனம் கிடு கிடுவென அவள் பால்யத்திற்கு சென்றது.

14 வருடங்களுக்கு முன்...

சுதந்திர தின இசை கச்சேரியில் லாவண்யாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற பாரதியாரின் பாடலுடன் கச்சேரி ஆரம்பித்தது. இவள் "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத" என்று பாட ஆரம்பித்தவுடன், ஒருவன் கூட்டத்தில் இருந்து "தமிழர் மட்டும் வாழ்ந்தால் போதுமா, பாரதம் வாழுமா?" என்று தகராறு செய்தான். கூட்டத்தினர் கூச்சலிட கச்சேரி நிறுத்தப்பட்டது. லாவண்யா குளமான விழிகளுடன் வீடு திரும்பினாள்.

அடுத்த மாதம் இவள் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். முதல் நாள் பார்மாலிடீஸ் முடிந்தவுடன் தனது சீட்டிற்கு திரும்பினாள். பக்கத்துக்கு இருக்கை ஆசாமி இவளையே பார்ப்பது போல ஒரு மாய எண்ணம். வீட்டிற்கு செல்லும் பொழுதும் பக்கத்து இருக்கை ஆசாமி தொடர்வது போல் ஒரு நினைப்பு. அவள் நிழலாய் அவன் மாறிவிட்டதாய் ஒரு உள்ளுணர்வு சொல்லியது.

"என்னங்க என்ன பிரச்சனை உங்களுக்கு? என் பின்னாடியே வரீங்க?" என்று ஒரு நாள் கேட்டே விட்டாள்.

"ஒண்ணுமில்லை உங்கள்ட சாரி சொல்லணும்" என்றான் அந்த ஆசாமி.

"நீங்க யாரு எதுக்கு சாரி சொல்லணும்?" மனதிற்குள் அவனை லூசு என்று நினைத்துக்கொண்டே கேட்டாள்.

"நான் விமல். ஒரு மாசம் முன்னாடி உங்க கச்சேரில தகறாரு பண்ணினது நான் தான். அன்னிக்கி எனக்கு ஒரு மூட் அப்செட். அதான் அப்படி நடந்துகுட்டேன். சாரி", என்றான் விமல். ஒரு முறைப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் லாவண்யா. அன்று முதல் இன்று வரை அவனது மூட் அப்செட்களை சுதந்திரமாய் அனுபவித்து வருகிறாள்.

ஒருவரை நமக்கு பிடித்து போனால் அவர்களிடமே நாம் வம்பிழுக்கிறோம். அவர்களை நம் வழிக்கு வரவைக்க முயற்சிக்கிறோம். இது போன்ற உணர்ச்சிகளே காதலாகிறது அல்லது நட்பாகிறது (ஒரே பாலினமாய் இருந்தால்). சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஊடலே காதலாகிறது. இவர்கள் விஷயமும் அப்படியே.

காதல் என்ற செடியை இருவரும் தண்ணீர் ஊற்றி வளர்க்க அது விருக்ஷமாகி, இருவரது பெற்றோர்களுக்கும் தனது கசப்பான கனியை பரிசளித்தது. தங்களது சுதந்திரத்தை பயன்படுத்தி (!!!) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் அவள் பெற்றோர் வீட்டிற்கு சென்று வரும் சுதந்திரத்தை கூட அவர்கள் பெற்றோர் மறுத்தனர்.

குழந்தைகள் பிறந்த பின் தான் விருப்பத்துடன் பார்த்து வந்த வேலையை சுதந்திரமாய் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. பிடித்த விஷயங்களான கச்சேரி பாடுவது கூட சுதந்திரமாய் நின்று போனது. காலையில் குழந்தைக்கு பாடல் ரெகார்ட் செய்து கொடுக்க குட முடியாத அளவு ஒரு டிஜெக்சன்.

நான்கு நாட்கள் முன், "விமல், பொண்ணுக்கு அரங்கேற்ற கச்சேரி வெக்கலாம் டா, ஸ்கூல் டீச்சர் அவ லாஸ்ட் அனுவல் டேக்கு பாடினது நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க" என்று கணவனிடம் சொன்ன பொழுது, "நீ பாடி என்னத்த பண்ணின. அவ நல்லா படிக்கட்டும் போதும்" என்றான். அவளுக்கு கிடைத்த இரு சிஷ்யர்களில் ஒருவருக்கு அரங்கேற்றம் செய்யும் சுதந்திரமும் போனது.

வெளிப்பார்வைக்கு நிறைவான வசதி, அழகான குழந்தைகள் என்று அழகாகவும், உள்ளே இருக்கும் ஏக்கத்தினால் வாடி வதங்கும் தனது நிலையை எண்ணி தம்புராவை மீட்டி "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே.. நீங்களெல்லாம் சொப்பனம் தானோ, வெறும் அற்ப மாயைகளோ" என்று பாடலானாள்.

No comments:

Post a Comment

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...