Monday, August 8, 2011

ட்ரிங் ட்ரிங்

குறிப்பு: இந்த படைப்பு ப்ரோமோசன் என்ற பெயரில் "அதீதம்" என்ற இணைய இதழின் ஜூன் மாத பதிப்பில் வெளியாகியுள்ளது. இந்த கதையை அதீதம் இதழில் படிக்க இங்கே சொடுக்கவும்.

டிர்ர்ரிங் ட்ரிங்...

வினோத் கால் அட்டென்ட் செய்ததும் "நாங்க HDFC லேந்து பேசுறோம். உங்களுக்கு upto 3 லாக் ரெடி லோன் sanction ஆகி இருக்கு. இது பர்சனல் லோன் நீங்க எதுக்கு வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்...." என்று மூச்சு விடாமல் பேசினாள் ஒரு பெண். வினோத்திற்கு கோபம் மூக்கு அல்ல நெற்றிக்கு மேல் வந்தது. "ஏங்க உங்களுக்குலாம் ஒரு தடவ சொன்ன மண்டைல உறைக்காதா? எவ்ளோ டைம் உங்க பேங்க் லேந்து போன் பண்ணுவீங்க"

போன் குரல் "சார் சாரி. உங்க நல்லதுக்கு தான சார் லோன் தரோம்.. நீங்க இந்த லோன் அமௌன்ட் வெச்சு என்ன வேணாலும் பண்ணலாமே சார்". "என்ன நல்லது. நீங்களும் உங்க லோனும். இனொரு டைம் கால் பண்ணினீங்கன்னா நடக்கறதே வேற" இது வினோத்.

"வீடு தேடி வந்து லோன் கொடுத்தா கசக்கத்தான் சார் செய்யும்.. நீங்களா போயி சேட்டு கடைல அடமானம் வெச்சு கைல கால்ல விழுந்து பணத்துக்கு அல்லாடும் பொது தான் சார் தெரியும். சும்மா பிகு பண்ணிகாதீங்க சார்." சற்று கடுமையாகவே அந்த பெண் பேசினாள்.

வினோதிற்கு அவன் பிரமோசன் இண்டர்வியுவிற்கு நேரமாகி கொண்டிருந்தது. அந்த கடுப்பில் "சாரி ஐ ஆம் நாட் interested" என்றான். அந்த கால் சென்ட்டர் பெண்மணி விடாமல் "இல்ல சார் நாங்க கம்மியான interest லோன் தரோம் இப்படி interest இல்லைன்னு சொன்னா எப்படி சார்"

"ஏண்டி உன் டார்கெட் ரீச் பண்றதுக்கு ஏன் என் தாலி அறுக்கற....." என்று ஆரம்பித்து கடுமையான வார்த்தைகளை கொட்டினான் வினோத். "ஹலோ மிஸ்டர்.. சாரி உங்க பேரு என்ன. கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாருக்கும்." என்றாள் கால் சென்ட்டர் பெண்.

"ஓஹோ என் பேரு கூட தெரியாமதான் எனக்கு கால் பண்ணி லோன் தரேன்னு சொன்னியா.. என்கேந்துடி உங்களுக்கு நம்பர் மட்டும் கிடைக்குது. கால் சென்ட்டர் பேருல கடலை போட்டுட்டு சுத்துறீங்களா? ..." என்று தனது இரண்டாவது சுற்று வசை மொழியை ஆரம்பித்தான். மணி மதியம் 2 ஆகவே நேரமாகி விட்டதை உணர்ந்து தொடர்பை துண்டித்தான். அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரமோசன் இண்டர்வியு கால் வரும் வழியாய் தெரியவில்லை. எனவே மதிய உணவிற்கு சென்றான்.

வினோத்தின் மனமெல்லாம் இண்டர்வியு பற்றியே இருந்தது. கிட்ட தட்ட மூன்று வருடங்களாய் ஏர்டெல் கால் சென்டரில் வேலை. அப்போது இப்போது என்று தட்டி கழிந்து வந்த பிரமோசன் இப்பொது வருவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக இவனது டீம் லீடர் சென்ற வாரம் கூறி இருந்தார். ஏதோ பெயருக்கு சாப்பிட்டு தனது சீட்டிற்கு சென்றான். பிரமோசன் கால் ஒன்று மணியிலிருந்து இரண்டு மணிக்குள் வரும் என்று வந்திருந்த மெயிலை இன்னொரு முறை சரி பார்த்துக்கொண்டான்.

மணி இரண்டரை ஆகவும் வினோத்தின் மனம் மிகவும் கலவரமடைந்தது.

பக்கத்துக்கு சீட் பிரபாகர் திடீரென்று துள்ளி குதித்தான். இவன் அருகில் வந்து "மச்சான் எனக்கு டீம் லீடா பிரமோசன் கிடசுருச்சி டா" என்று இவனை கட்டி பிடித்தான். "மச்சா உன் ரிசல்ட் என்னாச்சி டா"

"எனக்கு இன்னும் இண்டர்வியு காலே வரலடா மச்சான்"

"மாப்ள எனக்கும் இண்டர்வியு கால் வரல டா ஆனா ப்ரோமோசன் கிடசுருச்சினு மெயில் வந்துடுச்சி டா"

"என்னடா உளறுற.."

"நா உளறல. நீ போயி உனோட மெயில் செக் பண்ணு. உனக்கும் பிரமோசன் வந்துருக்கும் டா மாப்ள"

வினோதிற்கும் ஒரு மெயில் வந்திருந்தது:

sub: Promotion Interview

Hi Vinoth,

We regret to inform that you have not cleared the promotion interview. We praise your hard-work, punctuality, despite all these we cannot give you promotion due to யுவர் lack of patience. We expect you to continue your good work so that you may get the things cleared in the next try.

All the best and we are sorry once again.

With Regards,
Airtel HR Manager.

"நான் பிரமோசன் கால்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ கார் லோன் சான்க்சென் பண்ணிருக்கோம்னு ஒரு கால் வந்துச்சி, நான் டீடைல்ஸ் கேட்டுட்டு சாரி கார் வாங்குற அளவுக்கு வசதி இல்லனு சொன்னேன். தொன தொன னு பேசினாங்க; நா திருப்பி சாரி னு சொல்லிட்டு போன வெச்சிட்டேன் டா மாப்ள.." என்றான் பிரபாகர்.

வினோதிற்கு மெல்ல மெல்ல விஷயங்கள் புரிய ஆரம்பித்தபோது மறுபடியும் "டிர்ர்ரிங் ட்ரிங்...". இந்த முறை நிஜமாகவே HDFC இல் இருந்து கால் வந்தது.



3 comments:

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...