கதம்பம்:
கதம்பம்னா இன்னதுன்னு இல்லாம நெறைய விஷயங்கள் கலந்து இருக்குறது. தஞ்சாவூர் கதம்பம் ரொம்ப பேமஸ். அரளி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, சம்பங்கி, மல்லி, முல்லைனு இன்னும் நிறைய விதமான மலர்கள் சேர்த்து தொடுக்கப்பட்ட மலர் சரம், மலர் மாலை தஞ்சையில் மிகவும் புகழ் பெற்றது.
இப்போ நம்ம ஒரு இடத்துக்கு சாப்பிட போறோம், வெறும் இட்லி மட்டும்தான்னு இருக்கறது எப்படி, இட்லி, தோசை, ரவா இட்லி, குஷ்பு இட்லி (அது என்னங்க குஷ்பு இட்லி யாரானும் தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்களேன்), மசால் தோசை, நெய் தோசை, பொடி தோசைனு வகை வகையா இருந்தா எப்படி? ரெண்டாவது சுப்பரா இருக்கும்ல, அது மாதிரிதான் கதம்பமும். வகை வகையா இருந்தா அருமையா இருக்கும்ல அருண் கசாட்டா ஐஸ் கிரீம் மாதிரி.
பஜ்ஜில கூட கதம்ப பஜ்ஜினு ஒன்னு கேள்வி பட்டுருக்கேன், சாப்பிட்டதில்ல. அதுனால அதுக்கும் கதம்பம்கும் என்ன சம்பந்தம்னு தெரில.
மதுரை:
என்னடா கதம்பம்னான் இப்போ மதுரைக்கு வந்துட்டான்னு திட்டாதீங்க. மதுரைக்கும் கதம்பத்துக்கும் சம்பந்தம் இருக்கு. "கதம்ப வனம்" தெரியுமா? கேள்வி பட்டு இருக்கீங்களா? ஒரு காலத்துல மதுரை கதம்ப வனத்தால சூழப்பட்டு இருந்துச்சாம். எல்லா விதமான பறவைகள், விலங்குகள் ஒன்னுக்கொன்னு ஒத்தாசையா, தொந்தரவு பண்ணிக்காம வாழ்ந்துச்சாம் (இன்னிக்கி மனுஷங்க கூட இப்படி இருக்கறதில்ல). அந்த கதம்ப வனத்துலதான், மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் அருளாட்சி செய்ததா திருவிளையாடல் புராணம் சொல்லுது. கதம்ப வனத்துல எப்போதும் சந்தோசம் நீடிச்சு இருக்குமாம், பாம்பும் மயிலும் சேர்ந்து ஆட, குயில்கள் பாட, யானைகள் மத்தளம் வாசிக்கன்னு ஒரு பெரிய வர்ணனையே இந்த கதம்ப வனம் பத்தி இருக்கு. ஒரு வேளை மனிதன் வந்ததுக்கு அப்புறம் தான் எல்லா விலங்குகளும், பகை, த்வேஷம்லாம் கத்துக்கிச்சோ :( :(
சங்கீத மும்மூர்த்திகள்ள ஒருத்தரான முத்துசாமி தீட்சிதர் தன்னோட மீனாக்ஷி மீது அமைந்த பல பாடல்கள்ள "கதம்ப வன வாசினி"னு அம்மனை வர்ணிக்கிறார். "வாசினி" என்றால் வசிப்பவள் என்று பொருள்.
இட்லி - சட்னி:
மதுரை பத்தி பேசினா இட்லி சட்னி பத்தி பேசாம இருக்க முடியுமாங்க. எல்லா ஊருலயும்தான் இட்லி இருக்கு, சட்னி இருக்கு, ஆனா இந்த மதுரை இட்லி யப்பப்பா என்ன ருசி என்ன ருசி. சாப்பாட்டோட ருசி சாப்பாட்டுல இல்ல, சமைக்கிறவங்க, பரிமாறுறவங்க நம்ம மேல வெச்சுருக்குற பாசத்துல இருக்குன்னு நிறைய பேரு சொல்லுவாங்க. மதுரகாரவங்க பாசக்காரவனுக, ஒரு வேளை அதுனால இம்புட்டு ருசியா இருக்கோ?
சாப்பாட்டுல தமிழன அடிச்சுக்க ஆளே இல்லங்க. நீங்க தமிழ் நாடு விட்டு வெளிய வாங்க சப்பாடோட அருமை தெரியும். இட்லிக்கு தர சாம்பார் பாயசத்த விட இனிப்பா இருந்த எப்படி சாப்பிடுறதாம்? மதுரை மல்லி சட்னி, சாம்பார் இருந்தா போதும் லபக்கு லபக்குனு இட்லி உள்ள போய்க்கிட்டே இருக்கும். எங்கூருலேந்து மதுரை மூன்றரை மணி நேர தூரம் தான். ஊருபக்கம் வரப்போ மதுரை போய் ஒரு எட்டு சொக்கனை பாத்துட்டு இட்லி சாபிட்டுட்டு வரணும்.
பாசம்:
இனம் புரியாத ஒரு உணர்வு இது
பிரிக்க முடியாத பந்தம் இது
வெல்ல முடியா வேந்தன் இது
உயிரை வாழவைக்கும் அமுதம் இது.
இந்த பாசம்னு ஒரு விஷயம் இருக்குறதால தான் மனித வாழ்க்கையே ஓடிட்டு இருக்குன்னு சொல்லலாம். தெயவத்த துதிச்சு பாடி பூஜ பண்றவங்கலேந்து, அரசியல்ல ஊழல் பண்றவங்க வரைக்கும் எல்லாரும் ஒரு பாசத்துனால தான் பண்றாங்க. கடவுள் மேல பாசம் (பக்தி?? எனக்கு பக்தியைவிட பாசம் ஜாஸ்தி. கடவுளும் பாசத்ததான் எதிர்பார்க்குறார்னு எல்லா மதங்களும் சொல்லுது) இருக்கறதால பாட்டு பாடி பூஜை பண்றாங்க. பணத்துமேல பாசம் இருக்கறதால ஊழல் பண்ணி கொள்ளை அடிக்கறாங்க. பாசம் என்னவோ ஒன்னுதாங்க. இல்லைம்பீங்களா?
பாட்டு:
என்னதான் சொல்லுங்க பாட்டுன்னா கர்நாடக சங்கீதம் தான். எத்தனை ராகம், எத்தனை பாடல், எவ்வளவு சுகம். மனுஷங்க மட்டும் இல்லாம, மிருகங்கள், மரம், செடி, கொடினு எல்லா ஜீவ ராசியையும் வசப்படுத்துற சக்தி நம்ம சங்கீதத்துக்கு உண்டுங்க. நம்ம கர்நாடக சங்கீதம் ஆள அப்புடியே உருக்கி சொக்க வெச்சுடும்.
கர்நாடகம்னு பேருல இருக்கறதால தமிழ்லேந்து அதை தூரமா நினைக்காதீங்க. கர்நாடகம்னு பேரு வந்ததுக்கு காரணம் பழமை என்ற பொருள்ளதான். கர்நாடக சங்கீதத்துக்கும் தமிழுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் தேவார காலத்துக்கும் முன்னாடிலேந்தே இருக்கு. ஒரு பாட்டு கேப்போமா?
தண்டப்பயல் மொழி:
ஜாதி, இனம், மொழி, நாடு இப்படி மனிதருக்குள் பிரிவினை உண்டாக்கும் எந்த ஒரு விஷயமும் தவறானதே!!!
யோசிச்சு பாருங்க, இஸ்லாம், ஹிந்துனு ஒரு பிரிவினை இல்லாம இருந்தா நாமளும் பாகிஸ்தானும் இன்னிக்கி ஒண்ணா இருந்துட்டு இருப்போம். நாடுனு ஒரு பிரிவினை இல்லன்னா உலகத்துல எந்த போரும் நடக்காது ரத்த ஆறும் ஓடாது.
மொழிய ஒரு பொருட்டா கருதாம, மனிதனுக்கு தரவேண்டிய ஒரு உரிமைய கொடுத்துருந்தா இன்னிக்கி இலங்கை எப்படி இருந்துருக்கும்? மொழி, நாடுன்னு வெச்சு எதுக்கு மனுஷங்கள பிரிச்சு பாக்கணும்? முடிஞ்ச வரைக்கும் எல்லாரையும் நேசிச்சு அரவணைச்சு போவோமே?
No comments:
Post a Comment